தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்: குடும்பத்தினர், சாட்சிகளிடம் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விடிய, விடிய ஆய்வு நடத்திய நீதித் துறை நடுவர் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவுசெய்தார்.

Kovilpatti judicial magistrate inquiry with family and witnesses
Sathankulam custodial death

By

Published : Jun 30, 2020, 11:26 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடுத்தடுத்து இறந்தனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

இந்த வழக்கில், கோவில்பட்டி முதலாவது நீதித் துறை நடுவர் பாரதிதாசன் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்பேரில் கடந்த 27ஆம் தேதி கோவில்பட்டி சிறையில் நீதித் துறை நடுவர் பாரதிதாசன், நீதித் துறை தலைமை நடுவர் ஹேமா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் சிறையிலிருந்த கைதிகள், சிறைக் காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சிறையிலிருந்து ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

இதைத்தொடர்ந்து தொடர்ந்து நேற்று முன்தினம், நீதித் துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு ஆவணங்களைக் கேட்டுள்ளார்.

அப்போது அங்கு ஏற்கனவே பணியாற்றிய எழுத்தர் உள்ளிட்ட இரண்டு பேர் ஆவணங்களை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவற்றை அவர் ஆய்வுசெய்தார். விடிய, விடிய நடந்த இந்த விசாரணை அதிகாலை வரை நீடித்தது. சுமார் 16 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு நீதித் துறை நடுவர் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்.

காவல் துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நீதித் துறை நடுவர் பாரதிதாசன் நேற்று காலை 11.30 மணிக்கு திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து சாத்தான்குளத்தில் இறந்த வியாபாரிகளின் குடும்பத்தினர், சாட்சி அளிப்பவர்கள் திருச்செந்தூருக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு சாட்சிகள் ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, காவல் நிலையத்தில் வியாபாரிகள் தாக்கப்பட்டபோது, மாற்று உடை கொடுத்து விட்டு வாங்கி வைத்திருந்த ரத்தக்கறை படிந்த உடைகளை நீதித் துறை நடுவர் முன்னிலையில் உறவினர்கள் தாக்கல்செய்தனர்.

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த பென்னிக்ஸ் தனது குடும்பத்தினருடன்

முதலில் 3 சாட்சிகளிடமும், தொடர்ந்து ஜெயராஜ் மனைவி செல்வராணியிடமும் நீதித் துறை நடுவர் விசாரணை நடத்தினார். மற்றவர்களிடம் நள்ளிரவுவரை விசாரணை நடந்தது. அப்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை அவர் பதிவு செய்துகொண்டார்.

இந்த விசாரணை அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details