நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு சூழ்நிலைகளால் 60 சதவீதம் (15 லட்சம் டன்) மட்டுமே உப்பு உற்பத்தியாகியுள்ளது. இதில் 10 லட்சம் டன் உப்பு ஏற்கனவே விற்பனையாகிவிட்டது. தற்போது சுமார் 5 லட்சம் டன் அளவுக்கு உப்பளங்களில் கையிருப்பு உள்ளது.
மழைக்காலம் தொடங்கியிருப்பதால் உப்பின் விலை அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பானது டன்னுக்கு ரூபாய் ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 500 வரை விலை போகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி உப்பு உற்பத்தி செய்யும் பகுதி இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று குஜராத் மாநிலத்திலிருந்து 27,500 டன் உப்பை தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கொண்டு வரப்பட்டது. இதில் 15 ஆயிரம் டன் உப்பு மேட்டூரில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், மீதமுள்ள உப்பை தூத்துக்குடியிலேயே சேமித்து வைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரீ புளோ உப்பு தயாரிப்பதற்காக குஜராத் உப்பை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் உப்பு விலை உயர்ந்துள்ள நிலையில், தனியார் நிறுவனம் குஜராத்திலிருந்து கப்பல் மூலம் உப்பை குறைந்த விலைக்கு வாங்கி வந்துள்ளது. தொடர்ந்து இதேபோல் குஜராத்தில் இருந்து உப்பு வருமானால், தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பின் விலை குறைய வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : கொடைக்கனல் உருளைக் கிழங்கு விலை திடீர் வீழ்ச்சி!