தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதற்றம் நிலவிவருகிறது, பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு நடைபெறும் விஷயங்களை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஊடகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளையும், அதிகாரங்களையும் மோடி அரசு ரத்து செய்து, வரலாற்று துரோகம் நிகழ்த்தியுள்ளது. இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது.
திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கூடி மத்திய அரசின் இந்த சதிகாரப் போக்கை கண்டித்துள்ளன. நாடாளுமன்றத்தின் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். இதற்காக இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய உள்ளோம். நாட்டின் நெருக்கடியான இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டது சரியான முடிவு.
அதுபோல் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் நடிகர் ரஜினியிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாது. அவர் பாஜகவிற்கு ஆதரவான கருத்துக்களை கூறுவதுண்டு, ஆகவே அவர் மோடி-அமித் ஷாவை மகாபாரதத்திலிருந்து கிருஷ்ணன், அர்ஜுனன் என்று உவமையாக சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை" என்றார்.