தமிழ் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று(டிச.16) முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலான ஐந்து மணி நேரத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 122 மி.மீ மழைப் பதிவாகி உள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று (டிச.17) காலை 10 மணி முதல் பலத்த மழையாகப் பெய்து வருகிறது.
இதனிடையே தூத்துக்குடியின் பிரதான சாலைகளான தமிழ் சாலை, வஉசி சாலை, கடற்கரைச் சாலை போன்ற சாலைகளிலும், லூர்தம்மாள் புரம், இந்திரா நகர், நிகிலேஷ் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து உள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளன. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக 97 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பேரிடர் கால மீட்பு உதவிக்காக 1077 என்ற எண் மற்றும் மாநில பேரிடர் மீட்பு உதவி மைய எண்ணாக 1070 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:தூத்துக்குடி: 9.30 மி.மீ, ஸ்ரீவைகுண்டம்: 64 மி.மீ, திருச்செந்தூர்: 48 மி.மீ, காயல்பட்டணம்: 32, குலசேகரபட்டணம்: 51, சாத்தான்குளம்: 122 மி.மீ, கோவில்பட்டி: 5 மி.மீ, கயத்தாறு: 2 மி.மீ, கழுகுமலை: 6 மி.மீ, கடம்பூர்: 3 மி.மீ, எட்டயபுரம்: 3.40 மி.மீ, விளாத்திகுளம்: 7 மி.மீ, சாயல் குடி: 10 மி.மீ, வைப்பார்: 25 மி.மீ, சூரங்குடி: 20 மி.மீ, ஓட்டப்பிடாரம்: 9 மி.மீ, மணியாச்சி: 00 மி.மீ, வேடநத்தம்: 15 மி.மீ, கீழ அரசரடி: 00 மி.மீ என மொத்தம்: 431.70 மி.மீ மழைப் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் நாளையும் (டிச.18) மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?