தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் சார்பில் காற்றாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்வதற்கு பொட்டலூரணி கிராம சாலைதான் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இந்நிலையில், காற்றாலை உபகரணங்கள் கொண்டு செல்ல அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை இடையூறாக இருந்துள்ளது.
இதனால் காற்றாலை நிறுவனம் பொட்டலூரணி கிராம மக்களின் அனுமதி இல்லாமல் அங்கிருந்த பயணியர் நிழற்குடையை இரவோடு இரவாக ஜேசிபி கொண்டு இடித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த பொட்டலூரணி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் வேலையில்லா சூழ்நிலையை பயன்படுத்தி காற்றாலை நிறுவனத்திற்கு ஒத்துழைத்து உதவுமாறு இளைஞர்களுக்கு 50,000 மதிப்பிலான காசோலை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர்.