தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கடந்த நான்கு நாட்களாக டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்படவில்லை என்பதால், அந்த கிராமம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் மின்சாரத்துறை ஊழியர்கள் அலட்சியம் காட்டி வந்ததால், இதனைக்கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஓசனத்து சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரான்ஸ்பார்ம் அடிக்கடி பழுது ஏற்படுவது மட்டுமின்றி, சில நேரங்களில் உயர் மின்சாரம் வந்து டிவி உள்ளிட்ட மின்சாதனப்பொருட்களும் வெடித்து சேதமடையும் சூழ்நிலையும் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பசுவந்தனை மின்சார வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.