வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் கடல் அலையை மிஞ்சிய மக்கள் அலை தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலானது குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் நடத்தப்படும் திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருகனின் பிறந்த நாள் வைகாசி நட்சத்திரத்தில் வரும் நாளை வைகாசி விசாகத் திருவிழா யோகி சிறப்பு வாய்ந்ததாகும்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகப் பாத யாத்திரையாகத் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு வருவர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. பின், 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தைச் சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், முனிக்குத்தாரர்களுக்குச் சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.
பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயிலை அடைதல் நிகழும். இந்த வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக, காவடி எடுத்தும், வேல் குத்தியும் வந்து உள்ளனர். மேலும், பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் படி, பாதுகாப்புப் பணியில் ஏடிஎஸ் பி கார்த்திகேயன் தலைமையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்களும், 20 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதயாத்திரையாக வருபவர்கள் ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் படியான ஆடைகள், கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் பாம்பு உள்ளிட்ட விலங்குகளை வைத்து சர்ப்ப காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வருதல் கூடாது என்றும், மீறி சர்ப்ப காவடி எடுத்து வருவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: சாதி அடையாளங்கள், சர்ப்ப காவடி எடுக்க கூடாது.. காவல்துறை அறிவிப்பு என்ன?