தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது. தமிழ்நாட்டில் அந்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பது குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்ல இ-பாஸ் தேவை என்ற முறையை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
ஆனால், கரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், மாநில அரசு அதை நடைமுறைப்படுத்த யோசிப்பதாகத் தெரிகிறது. பொதுவாக மாநில அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால் எல்லோருக்கும் நல்லதாக இருக்கும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் உண்ணாவிரதம் இருந்தவன் நான். ஆனால், பொதுமக்களுக்கு எது நல்லது தொழிலாளர்களுக்கு எது நல்லது? என இரண்டையும் மனதில் வைத்துக்கொண்டு அரசு முடிவு எடுப்பது சரியாக இருக்கலாம். வேறு ஏதாவது விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு முடிவெடுப்பது சரியாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.
'விலக்கு அளித்தால் மட்டும் ஏதுவும் மாறிவிடாது' - பொன். ராதாகிருஷ்ணன் நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்களிப்பதால் எதுவும் மாறப்போகிறதா? நம்முடைய மாணவர்களை தகுதி படைத்தவராக மாற்ற வேண்டும். அதற்கு தக்கபடி, அவர்களுக்குப் பயிற்சி வழங்க வேண்டும். மத்திய அரசுக்கும், நீட் தேர்வு நடத்தக் கூடியவர்களுக்கும் இந்தச் சூழ்நிலை தெரியும்.
பாஜகவில் அங்கம் வகிக்கக்கூடிய அரசுதான் தமிழ்நாட்டில் 2021இல் ஆட்சியைப் பிடிக்கும். இதில் இரண்டாவது கருத்து தேவையில்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கட்சி தனித்துப் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தது பாராட்டக்கூடிய ஒன்று" என்றார்.
இதையும் படிங்க: அமைச்சரின் கூட்டத்தில் அரசு விதிகள் மீறல்: மக்கள் முகம் சுளிப்பு