உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இத்தாலியில் நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 2,503 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்மாநில அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள், திரையரங்குகள், கண்காட்சி உள்ளிட்ட அனைத்தும் வருகின்ற 31ஆம் தேதி வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிவேகமாகப் பரவிவரும் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் ஆங்காங்கே நடந்துவருகின்றன.