விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 96 ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு உருவ படத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் 8 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்நிலையத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக ஆட்சியில்தான் கோவில்பட்டிக்கு 2ஆவது குடிநீர்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதைப் பற்றி தவறான தகவல்களை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். என்னிடம் போதிய ஆதாரம் உள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்கு தவறான தகவலை தெரிவிக்கக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து.
நான் மெத்த படித்த மேதாவி அல்ல. சராசரி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். எங்களுடைய பணி மக்களுக்கான பணியாக இருக்கும். இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்களை புழல் சிறையில் அடைப்போம் என்கிறார். ஸ்டாலின் என்ன சர்வாதிகாரியா அல்லது ஹிட்லரா? இப்படிப்பட்ட நிலையை மக்கள் விரும்ப மாட்டார்கள்.