தூத்துக்குடியில், மாநகராட்சி சார்பாக சிவந்தாகுளம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிக்கு பேருந்து வழங்கும் விழா, ஆட்சி மொழி வாரவிழா, விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா ஆகியவை சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள பேருந்தை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தமிழ் மொழியின் சிறப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, பேரணி சென்றனர்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளியை பார்வையிட்ட அமைச்சர் அங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறை, இட வசதி உள்ளிட்டவை குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
டெல்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது, அவருடைய சொந்த கருத்தாகும். அதற்கு நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது. மேலும், டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் போல் தமிழகத்திலும் நடைபெறலாம் என எச்.ராஜா கூறியது தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் நடைபெறுகின்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும், காவல்துறையினரின் அனுமதி பெற்று, அமைதி முறையிலேயே நடைபெற்று வருகின்றது. ஆகவே, அம்மாதிரியான சூழல் தமிழகத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
மேலும், அதிமுக ஆட்சியில் தான் மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திமுக ஆட்சியில் எவ்வித நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இதுதான் அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்யப்பட்ட நலத் திட்டங்கள் மூலமாக தனிநபர் வருமானம் உயர்ந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கடன் சுமை என்பது உலகளாவிய பொருளாதார நிதி நிலைமை வீக்கம் அடைந்திருப்பதால் ஏற்பட்டுள்ளது. இது கனிமொழிக்கும் தெரியும். ஆகவே அவர் கூறும் கருத்துக்கள் அரசியலுக்காக பேசப்படுபவை. திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறினர். ஆனால், இப்போது வரை அந்த இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு தரப்பட்டது என்று அவர்களால் கூற முடியுமா? என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்க குழு டெல்லி கலவரத்தை அரசியலாக்குகிறது - வெளியுறவுத்துறை