தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மாநிலத்திலுள்ள 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
இதனால் தமிழ்நாட்டில் மீன் உணவு பொருளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே, ஒன்றிரண்டாக பதப்படுத்தப்பட்ட மீன்களை விற்பனை செய்வோரும் மீன்களுக்கு கடும் விலை நிர்ணயம் செய்வதால், மீன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊரடங்கு உத்தரவினால் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.
இதை மீனவர்கள் அனைவரும் பின்பற்றி வருகிறோம். இந்நிலையில் தமிழ்நாட்டில் உணவுப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானதையடுத்து, விவசாயத்திற்குத் தடையில்லை என்ற அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார்.
உணவுப் பட்டியலில் புரதச்சத்து மிக்க உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தவகையில் புரதச்சத்து மிக்க உணவான மீன்களை சந்தைப்படுத்த முடியாதசூழல் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸை எதிர்கொள்ள "வைட்டமின் சி" அவசியம் என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் சென்று சேர்ந்துள்ளது.
ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் மீன்களை விற்பதற்கான சூழல் எங்களுக்கு இல்லை. கடந்த 8 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் ஊரடங்கு உத்தரவினை கடைப்பிடித்துவருகிறோம். தினசரி பிழைப்புக்காக, கடலுக்குச் சென்றுவரும் மீனவர்கள் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக கடலுக்குச் செல்லாததால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கோரிக்கை விடுக்கும் மீனவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்ட மீனவர்களும், இதனால் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். இந்தநிலையில் மீனவர்களுக்கு கிடைக்கவேண்டிய தடைக்கால நிவாரணமும் சரியான முறையில் தரப்படவில்லை. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்திருப்பது, மீனவர்களுக்கு போதுமானது கிடையாது.
எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு விவசாயத்திற்குத் தடையில்லை என்று அறிவித்ததைப்போல மீனவர்களுக்கும் தடையை விலக்கி அறிவிப்பு செய்ய வேண்டும். இல்லையெனில் மீனவர்களின் நலனுக்காக சிறப்பு நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: இந்தியா பாடம் படிக்க வேண்டும்!