தூத்துக்குடி மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், மத்திய அரசின் தேசிய மீன்வள கொள்கை வரைவு திட்டத்தை கண்டித்து தேசிய மீன்வள கொள்கை வரைவு திட்ட எதிர்ப்பு பரப்புரை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரெட்டியபுரம் மகேஷ், ராஜேஷ், கெபிஸ்டன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'ஊரடங்கு காலத்திற்கு மத்தியிலும் மத்திய அரசு தேசிய மீன்வள கொள்கை வரைவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த திட்டமானது மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக்கூடியது. கடலில் 12 மைலுக்கு அப்பால் உள்ள அனைத்தும் மத்திய அரசுக்கே சொந்தம் எனும் வகையிலும், கடல் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல துறைகளையும் மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு வரும் பொருட்டு மத்திய மோடி ஆட்சி இத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்படும்.
எனவே மத்திய அரசு உடனடியாக தேசிய மீன்வள கொள்கை வரைவு திட்டத்தை கைவிட வேண்டும். மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளை கைப்பற்றுவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசின் தேசிய மீன்வள கொள்கை வரைவு திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.