தூத்துக்குடி மாநகராட்சியில், ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,’ தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக துப்பரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தினமும் நாங்கள் சேகரிக்கும் குப்பைகளை ஐந்து விதமாக தரம் பிரிக்கச் சொல்லி, அதிகாரிகள் பணி சுமையை ஏற்படுத்தி வருகின்றனர்.
நாள்தோறும் குப்பைகளில் வந்துசேரும் நாப்கின்கள், தேங்காய் நார், பிளாஸ்டிக் கழிவுகள், மரத்துண்டுகள், காய்கறிக் கழிவுகள், எண்ணெய் கழிவுகள் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக தரம் பிரிப்பதற்கு இரவாகி விடுகிறது. சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளை கேட்கும்பொழுது, தகாத வார்த்தைகளால் பேசுவதோடு கோரிக்கைகளை அலட்சியப் படுத்துகிறார்கள். இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளோம். ஆகவே அதிகாரிகளால் ஏற்படும் பணிச்சுமையை குறைக்க வேண்டும், பணிநேரம் வரன்முறை செய்யப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.