தூத்துக்குடி : கரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் அவ்வப்போது ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கும், செமஸ்டர் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த் தொற்றின் தாக்கம் தொடர்ந்து இருந்ததால் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகளும் நடத்தப்படாமல் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வில் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது.
ஆசிரியர்கள் நான்கு பேருக்கு கரோனா
அந்த அறிவிப்பின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (செப்.1) திறக்கப்பட்டன. இந்நிலையில், தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து இன்று பள்ளி திறக்கப்படவில்லை.
இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 300 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 29 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக்கு விடுமுறை
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து பள்ளிகளும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றித் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முடிவைதானேந்தல் பள்ளிக்கு பணிக்கு வந்த ஆசிரியர்கள் நான்கு பேருக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து மாணவர்களின், சுகாதார நலன்கருதி முடிவைதானேந்தல் அரசுப் பள்ளிக்கு இன்று (செப்.1)முதல் 7 ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது. மேலும் பள்ளியில் தகுந்த கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி அறிக்கை தரவும் உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 1509 பேருக்கு கரோனா