இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தற்போது வரையும்கூட நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்கதையாகிவருகிறது. இதனை சரிசெய்ய மத்திய, மாநில அரசு பல்வேறு தொழில் கடன், சுயதொழில் பயிற்சி பட்டறைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியிருந்தாலும் அவை தேவையை நிவர்த்தி செய்ய போதுமானதாய் இல்லை. இதனிடையே, கரோனா நெருக்கடி நிலைமையை மேலும் சிக்கலாக மாற்றியுள்ளது.
இதனாலேயே பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலையை கைப்பற்றிவிடுவதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். அரசு தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமாக அரசு பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் அரசு பணிகளுக்கு தேர்வின் அடிப்பைடையில் ஆள்கள் தெரிவு செய்யும் நடைமுறை உள்ளது.
இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு கரோனா காலம் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. ஏப்ரலில் நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து டிஎன்பிஎஸ்சி என்ன அறிவிப்பை வெளியிடும், தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பமான மன நிலைக்கு மாணவர்கள் வந்துவிட்டனர். இந்நிலையில், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி வரும் தனியார் அகாடமி ஒன்றிற்கு நேரில் சென்று கள நிலவரத்தைக் கேட்டறிந்தோம்.
”கரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இந்தத் தேர்வுக்காக இதுவரையிலும் எனது குடும்பத்தினர் எனக்கு மிகுந்த பொருளாதார உதவிசெய்துள்ளனர். தேர்வுகள் தள்ளிப் போவது ஒருபுறமிருக்க, ஆன்லைனில் பயிலும் வசதி என்னிடம் இல்லை. என்னுடைய உடைந்த பட்டன் மொபைலில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வது எப்படி சாத்தியமாகும். வெகு சீக்கிரத்தில் போட்டித் தேர்வை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் நாள்களை நகர்த்துகிறேன்” என்கிறார், மாணவர் கவிபாலன்.
ஆன்லைனின் படிப்பது வசதியாக இருப்பதாக ஒரு தரப்பினர் கூறினாலும், அது சிரமத்தை ஏற்படுத்துவதாகவே மற்றொரு தரப்பினர் முறையிடுகின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் சந்தேகங்களைக் கேட்பது கடினமாக உள்ளது. கரோனாவால் நண்பர்களுடன் கலந்தாலோசித்து படிப்பது சாத்தியமில்லாமல் போனது என மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாணவி ராஜேஷ்வரி கூறுகையில், “ஆன்லைன் வகுப்பில் படிப்பது எனக்கு சுலபமாக இருக்கிறது. கரோனா நெருக்கடியில் படிப்பதற்கான கால அவகாசம் கிடைத்துள்ளது. இந்த இடைவெளி தேர்வுக்கு இடையூறாக இருக்கும் என நினைத்தேன் ஆனால், ஆன்லைன் வகுப்புகள்தான் அதை ஈடுகட்டின. எனது அகாடமியின் ஆசிரியர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி எங்களுக்கு போன் மூலமாக சந்தேகங்களை தீர்த்து வைப்பது சற்று ஆறுதலாக உள்ளது” என்றார்.
போட்டித் தேர்வர்களின் தன்னம்பிக்கை பளிச்சிடும் சிறப்புச் செய்தி! ”அரசின் அனுமதியோடு தகுந்த இடைவெளியுடன் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளோம், மாணவர்களின் நலனுக்காக 6 அடி இடைவெளிவிட்டு அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்காக அவர்களிடம் நாங்கள் கட்டணங்கள் வசூலிப்பதில்லை. மேலும் கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் உள்ளிட்டவைகளும் வழங்கிவருகிறோம். மாணவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்” என்றார் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து.
ஆன்லைன் கல்விக்கு பொருளாதார சமமின்மை மிகப் பெரிய தடையாக இருக்கிறது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, இரவு பகலாக படித்த மாணவர்களுக்கு இந்த இடைவெளி கசப்பான, சோர்வளிக்கும் அனுபவம்தான். ஆனாலும், இந்த கரோனா காலத்தை போட்டித் தேர்வுகளுக்காகத் தங்களை தயார் செய்யும் கால அவகாசமாக மாணவர்கள் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களே மன உளைச்சலுக்கான மருந்து.
அதுவே, லட்சியங்களைச் சென்றடைய உதவும் வழியும் கூட.
இதையும் படிங்க: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய செயலி...!