தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு, மாவட்ட ஆட்சியர் சென்று, வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்தார். மேலும், வெளி நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் இடம், மருந்துக் கிடங்கு ஆகியவற்றை ஆய்வுசெய்து, முறையாக மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதையும் சோதனை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவுகளுக்குச் சென்று பார்வையிட்ட ஆட்சியர், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் மருந்து அறிக்கையை ஆய்வுசெய்து, நோயாளிகளிடமிருந்து நோய் மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
பின் சி.டி. ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், டயாலிசிஸ் அறை, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, அரசு மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர்கள் உடனிருந்தனர்.