துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் பாடப்புத்தக அட்டையில் காவி தலைப்பாகையுடன் மகா கவி பாரதியாரின் உருவப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காவி தலைப்பாகை பாரதி உருவப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி: பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக அட்டையில் காவி தலைப்பாகையுடன் மகா கவி பாரதியாரின் உருவப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சோ. ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலர் மு. மணிபாரதி, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காவி தலைப்பாகையுடன் பாரதியின் படத்தை பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருப்பதைக் கண்டித்தும், பாரதியை தவறாக சித்திரித்து வெளியிட்ட பிளஸ் 2 தமிழ் பாடப் புத்தகத்தை திரும்பப் பெற்று பாரதியை உரிய முறையில் மாணவர்களுக்கு இனம் காட்ட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன முழக்கமிடப்பட்டது.