தூத்துக்குடியில் தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினார்கள்.
அப்போது பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன், ’உப்பில் அயோடின் பற்றாக்குறை காரணமாக முன் கழுத்துக் கழலை, தைராய்டு, மனவளர்ச்சி குறைபாடு, உள்ளிட்டப் பல்வேறு வகையான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அயோடின் கலந்த உப்பை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அதுபோல் உற்பத்தியாளர்களும் அயோடின் கலந்த உப்பினை அதற்கான தரத்துடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், உணவு பாதுகாப்புத்துறை மூலம் உப்பு உற்பத்தியாளர்கள் மீது போடப்பட்ட சிறு வழக்குகள் ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மூலமாக எடுக்கப்படும்' என தெரிவித்தார்.
உப்பளத்தொழிலாளர்களுக்கு எடைக்குறைவான செருப்பு வழங்க நடவடிக்கை: இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'உப்பு உற்பத்தியாளர்கள் வேண்டிய அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மேலும் மழைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் தொழிலாளர்கள் உப்பளங்களில் வேலை செய்யும் வகையில் மிகக் குறைந்த எடையுள்ள காலணிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.