திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வரை 60,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் ஓகைப்பேரையூர் கிராமத்தில் வெள்ளையாற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெள்ளையாற்றில் குறைந்த அளவு நீர் செல்வதால் அதிலிருந்து பிரியக்கூடிய வாய்க்காலிலும் குறைந்த அளவு தண்ணீர் செல்கிறது இதனால் ஓகைப்பேரையூர் கிராமத்தில் விதை தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விவசாய நிலத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் விதை தெளிக்க முடியாமல் விவசாயிகள் இருந்து வந்த நிலையில், வாய்க்காலில் செல்லக்கூடிய குறைந்த அளவு தண்ணீரை அன்னக்கூடை மூலம் விவசாய நிலத்திற்கு பாய்ச்சி வருகின்றனர். ஆகையால், வெள்ளையாற்றில் முறை வைக்காமல் கூடுதல் தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.