திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், “கடந்த இரண்டாண்டு காலமாக மத்திய அரசு கொள்முதல் கொள்கையை கைவிட்டு, விவசாயிகளுக்கு முன்பணம் வழங்குவதை மறைமுகமாக நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நடப்பாண்டு குறுவை கொள்முதல் அக்டோபர் 1இல் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் முழுமையான கொள்முதல் செய்யப்படவில்லை. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உடனுக்குடன் பணமும் வழங்கப்படவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சம்பா அறுவடை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் முழுமையான கொள்முதல் தொடங்கப்படுமா? என்ற சந்தேகமும் அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியாளர் குழுக்களே கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மேலும் அதிர்ச்சியளிக்கிறது.