திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் எதிரே உள்ள மைதானத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவுப்பொருட்கள், முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு காவல் துறை ஐஜி சாரங்கன், காவல்துறை டிஐஜி லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் 370 காவலர்களுக்கு உணவுப்பொருள்கள், முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை வழங்கி காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
உணவுப் பொருட்கள் வழங்கிய சிறப்பு ஐஜி அப்போது அவர் பேசுகையில், "திருவாரூர் மாவட்ட காவல் துறையினர் மிக சிறப்பாக செயல்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் கரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இதுவரை 128 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் 58 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்கள் சிகப்பு நிறத்தில் இருந்து விரைவில் பச்சை மண்டலமாக மாற்றப்படும். செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை!