தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைய வழியில் மாநிலத் தலைவர் த. புண்ணியமூர்த்தி தலைமையில் இன்று மன்னார்குடியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'மத்திய அரசு 50 விழுக்காடு முதல் 83 விழுக்காடு வரை விவசாய உற்பத்தி பொருள்களுக்கு விலை உயர்த்துவதாக அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக ஊடகங்களில் அறிவித்தது. ஆனால் அது குறித்த எழுத்துப் பூர்வமான அறிக்கையில் நெல் குவிண்டால் 1க்கு 53 ரூபாய் விலையை உயர்த்தி உள்ளதாக அறிவித்து விவசாயிகளை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது வண்மையாகக் கண்டிக்கதக்கது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. எனவே உற்பத்தி செலவை கணக்கிட்டு அதில் 50 விழுக்காடு கூடுதல் விலையாக உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும். குறைந்த பட்சம் ரூ. 2,500 அறிவித்திட முன்வர வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு 2020ஆம் ஆண்டு புதிய மின்சார சீர்திருத்த சட்ட வரைவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதனைக் கண்டித்தும், இலவச மின்சாரம் தொடர வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை அழிக்கும் நோக்கோடு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுத்தப்படும் மேட்டூர் அணை - சரபங்கா உபரி நீர் திட்டத்தை கைவிடக் கோரியும் வரும் ஜூன் 5ஆம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தோம்.
அதற்கு 144 தடை உத்தரவு தொடர்வதைக் காரணம் காட்டி காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதால் அதே தினத்தில் தமிழ்நாடு முழுவதும் உழவர்கள் தங்கள் வீடுகள் அல்லது விளை நிலங்கள், சங்க அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நுகர்வோரின் திருப்தி முக்கியம்: மின்சார அமைச்சகத்தை வலியுறுத்திய மோடி!