திருவாரூர்:நன்னிலம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு இடியாறு தூர்வாரப்பட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள காளியாகுடி கிராமத்தில் பாசன வசதி பெற்று வந்த இடியாறு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் காளியாகுடி அன்னதானபுரம், முகந்தனூர், வாலூர் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறையின் சார்பில் தூர்வாரும் பணிகள் அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய விவசாயிகள் கூறுகையில், 'கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடியாற்றை தூர்வாராததால் காடுகள் மண்டி தடயம் இல்லாமல் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தூர்வாரக்கோரி பலமுறை பொதுப்பணித்துறை அலுவலர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர்.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இடியாற்றைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் இடியாறு இதேபோல், நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளதால் அதனை உரிய கணக்கெடுப்பு நடத்தி அனைத்தையும் தூர்வாரி கொடுத்தால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் படிங்க:
கரூரில் தடுப்பூசி பற்றாக்குறை : தடுப்பூசி முகாம்கள் செயல்படாது