திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை சார்பில் மாடித் தோட்டம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைமையில் குழு அமைத்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதற்கான இழப்பீட்டுத் தொகை கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
கடந்த ஆட்சியில் ஏற்கனவே கட்டிய கல்லணை தடுப்பணைகள் உடைந்துவிட்டன. அதனைச் சரிசெய்கின்ற பணி நடைபெற்றுவருகிறது.
அமைச்சர் சக்கரபாணி பேட்டி விவசாயிகளுக்குத் தேவையான நீரைத் தேக்கிவைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துவருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் 39 ஆயிரம் மெட்ரிக் நெல் மூட்டைகள் இருப்பில் உள்ளன. அதனை அரிசி முகவர்களை அழைத்து விரைவில் அரைக்க உத்தரவிட்டுள்ளோம்.
தடுப்பூசி போட்டால்தான் ரேஷன் பொருள்களா?
மேலும் மாதந்தோறும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அரைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேறு மாநிலத்தவர்களுக்கு அரிசி கிடைக்கவில்லை எனக் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிர் இழப்பீட்டைப் பொறுத்தவரை வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட நிர்வாகம் அதனை ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். குறுவை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மூன்று லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டால்தான் ரேஷன் பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்பது வதந்தி அதுபோன்ற அறிவிப்பை அரசு கொடுக்கவில்லை. அதனைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். திருவாரூர் மாவட்ட மக்களுக்கு அன்பான வேண்டுகோளாக வைக்கிறேன் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்