திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள மண்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தையல் தொழில் செய்து வந்தார். ராமமூர்த்தி தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்திட ஏற்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து கரியமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அதற்கான அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது முறையாறு பாலம் அருகே எதிர்பாரத விதமாக எதிரில் அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ, ராமமூர்த்தியின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமமூர்த்தி சுமார் 10 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
பின்னர் சக வாகன ஓட்டிகள் அவரை மீட்ட போது வலது கை முற்றிலும் துண்டானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.