ஏரி நிரம்பியதால் சாலையில் ஓடும் தண்ணீர் திருவண்ணாமலை: செய்யாறு அருகே சித்தாத்தூர் கிராமத்தில் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்ந்து போனதால்; அவ்வழியாகச் செல்லும் சாலையில் தரைப்பாலத்திற்கு மேலே சாலையில் தண்ணீர் செல்வதால் அச்சாலை வழியாக வாகனங்களில் செல்லும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கால்வாயைத் தூர் வாரி கால்வாயின் குறுக்கே சாலையில் உயர்மட்ட பாலம் அமைத்துத் தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கடந்த மாதத்தில் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மாண்டஸ் புயலில் தமிழ்நாட்டில் அதிகப்படியாக வெம்பாக்கம் வட்டத்தில் பெய்த 25 செ.மீ மழையில் சித்தாத்தூர் கிராமத்தின் பெரிய ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
ஏரியிலிருந்து வழிந்தோடும் உபரி நீரானது கால்வாய் வழியே மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்குச் சென்றடையும். இந்நிலையில் அந்த கால்வாய் தூர்ந்து போனதால் உபரி நீர் கால்வாயின் கரைபுரண்டு விவசாய நிலங்களை மூழ்கடித்துச் செல்கின்றன.
மேலும், அந்த பகுதியின் வழியாக பாண்டியன் பாக்கம் - வெம்பாக்கம் சாலை செல்கிறது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள பிரதான சாலையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த இரு தினங்களாக உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு அதிகமாகி கால்வாயின் குறுக்கே சாலையில் கட்டப்பட்டுள்ள தரை மட்ட பாலத்தையும் தாண்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் மழை வெள்ளம் செல்வதால் அவ்வழியாக செல்கிறது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவ்வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்து இரு தினங்களாக இயக்கப்படாததால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பேருந்து வசதியின்றி தவித்து வருகின்றனர். கால்வாய் தூர் வாரப்படாததாலும், சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரை மட்ட பாலத்தின் மீது மழை வெள்ளம் வழிந்தோடுவதாலும் இந்த பிரச்னை நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் விவசாயமும், போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் உபரி நீர் கால்வாயினை தூர் வாரியும் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கவும் வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:தொடர் மழை காரணமாக மரக்காணம் தீர்த்தவாரி கடலில் குளிக்கத் தடை