திருவண்ணாமலை நகரில் உள்ள தியாகி அண்ணாமலை மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, நகராட்சியை சேர்ந்த தூய்மை காவலர்கள், பணியாளர்களால் கிருமிநாசினி தெளித்து, குளோரின் பவுடர் தூவப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு நோய் தொற்று பரவி வருகிறது. கல்வித்துறை அலுவலர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருந்துவந்த நிலையில், தற்போது அவர்களுக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது அந்த அலுவலகத்தில் பணியாற்றிய மற்ற அலுவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் கரோனா படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாகவும், தனிமைப்படுத்தும் மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதால் தற்போதைக்கு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.