கிரிவலப் பாதை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நித்தியானந்தர் ஆசிரமம் எதிரே அமைந்துள்ளது, புகழ்பெற்ற ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று ( ஏப்.26 ) முதல் கால யாகசாலையுடன் விமர்சையாக விழா தொடங்கியது.
தொடர்ந்து இன்று ( ஏப்.27 ) அதிகாலை கோபூஜை, துவார பூஜை, மண்டப பூஜை என இரண்டாம் கால யாகசாலை நடைபெற்று பல்வேறு மூலிகை பொருட்களைக் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதியும் விமர்சையாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் திருக்கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்கள் இசைக்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளுக்கும், மூலவர் விமானத்திற்கும் மற்றும் திருக்கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் ஆலய ஜீரணத்தாரண அஷ்டபந்தன சமர்ப்பண மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பஞ்ச கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருவண்ணாமலை, கோசாலை, வேங்கிக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:''திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்'' - அமைச்சர் சேகர்பாபு!