திருவண்ணாமலை மாவட்ட மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். மேலும், துணை தொழிலாக கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை பேணிகாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒரு மருத்துவமனை, ஐந்து கால்நடை மருத்துவமனைகள், 122 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 19 கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 119 கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம், திருமணி, மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமங்கள், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், குத்தனூர், வெங்களத்தூர் கிராமங்கள், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், பாலமேடு கிராமம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஆகிய கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, நபார்டு திட்டத்தின் கீழ், ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து 2017-2018 ஆம் ஆண்டு, தலா ரூ. 31.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆறு கால்நடை மருந்தக கட்டடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன், செய்யார் வருவாய் கோட்ட அலுவலர் விமலா, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.