திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே உள்ள குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பாசனத்திற்காக நீரை திறந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
குப்பநத்தம் நீர்த்தேக்கம் 43.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கத்திற்கு 225.96 சதுர கிலோ மீட்டர் நீர் பரப்பளவு உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 59.04 அடி, அணையின் முழு கொள்ளளவு 700 மில்லியன் கன அடியாகும். தற்போது அணையின் நீர் மட்ட உயரம் 35 அடியாகவும், அதன் கொள்ளளவு 222 மில்லியன் கன அடியாகவும் உள்ளன.
அணையில் தேக்கப்படும் நீர் நேரடியாக செய்யாற்றில் திறந்துவிடப்பட்டு அதன் மூலம் கீழே உள்ள ஐந்து அணைக்கட்டுகளின் வாயிலாக மொத்தம் 47 ஏரிகளின் மூலம் 9 ஆயிரத்து 810 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. குப்பநத்தம் அணையின் மூலம் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், கலசபாக்கம், போளூர் வட்டங்களைச் சேர்ந்த 40 கிராமங்கள் பயனடைகின்றன.