திமுகவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக ஏ.வ. வேலு திகழ்கிறார். அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் ஜானகி அணியில் சேர்ந்தார். அதன்பின்னர் அதிமுகவில் சேர்க்கப்படாததால் திமுகவில் இணைந்தார். மாவட்டச் செயலாளர், அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமானவராக இருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அவர், திமுக ஆட்சியில் மாநில உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக எம்எல்ஏவாக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக, 2011ஆம் ஆண்டு, திமுகவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் எதிர்பலை வீசியபோதும் கூட 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.