திமுக சார்பில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், " மாநிலத்தை ஆளக்கூடிய ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என்று சபதத்தை ஏற்கக்கூடிய முப்பெரும் விழாவாக இது அமையும் என்றார்.
நாடு முழுமைக்கும் ஒரு மொழி அவசியம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லுகிறார். அதுதான் இந்தியாவிற்கு அடையாளத்தைத் தரும், அதிக மக்களால் பேசக்கூடிய இந்தி மொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 652 மொழிகள் பேசப்பட்டு வருகிறது. அதனால்தான் அன்றே பெரியார் சொன்னார், இது கலாசார படையெடுப்பு, இந்தி பேசுபவர்களின் நாகரிகம் வேறு, நம்முடைய நாகரிகம் வேறு என்று.
இந்தியைத் திணிக்கிற எந்த முயற்சியையும் திமுக பார்த்துக் கொண்டிருக்காது. அதைத் தடுக்கிற முயற்சியில்தான் உறுதியாக ஈடுபடும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தி–யா? இந்தியாவா? எதை வேண்டும் என்று சொன்னால், இந்தியாதான் வேண்டும் என்று சொல்பவர்கள்நாங்கள். இது அரசியல் போராட்டம் அல்ல, இது பண்பாட்டுப் போராட்டம், மொழிப்போராட்டம், அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து, அனைவரும் இணைந்து போராடுகிற போராட்டத்திலே பங்கேற்க வேண்டும்.