நடைபயணமாக முதலமைச்சரிடம் மனு அளிக்கச் சென்ற தொழிலாளர்கள் கைது
திருவண்ணாமலை: ஏழு மாத நிலுவை ஊதியத்தை வழங்கிட கோரி, தடையை மீறி கோட்டை நோக்கி முதலமைச்சரிடம் மனு அளிக்கச் சென்ற தொழிலாளர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கரைபூண்டியில் தரணி சர்க்கரை ஆலை செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக ஊதியம் வழங்காமல் ஆலை நிர்வாகம் நிலுவை வைத்துள்ளது. இதனால் கரோனா ஊரடங்கில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி தவித்துவருகின்றனர்.
தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், ஆலையை இயக்கக்கோரியும், பலமுறை கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தொழிலாளர்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு அலுவலர்களிடம் மனு அளித்தும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தரணி சர்க்கரை ஆலையை இயக்கிட கோரியும் தொழிலாளர்களுக்கு 7 மாத நிலுவை ஊதியம் வழங்கக்கோரியும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கிட கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆலையின் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து சென்னை கோட்டை நோக்கிச் செல்லும் நடைபயணத்தை தமிழ்நாடு சர்க்கரை தொழிலாளர் சம்மேளனத்தின் சிஐடியு பொதுச்செயலாளர் உதயகுமார் தொடங்கிவைத்து நடைபயணம் செல்ல முற்பட்டனர்.
அப்போது திருவண்ணாமலை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) வனிதா தலைமையிலான காவல் துறையினர் நடைபயணம் செல்ல முயன்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
காவல் துறையினரின் இந்தச் செயலைக் கண்டித்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போளூர் - சேத்துப்பட்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடையை மீறி நடைபயணம் சென்ற குழந்தைகள், பெண்கள், உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.
அப்போது குழந்தைகளை ஏடிஎஸ்பி வனிதா வாகனத்தில் ஏற்ற வேண்டாம் எனக் கூறியதால் பெண் தொழிலாளர்கள் குழந்தைகளுடன் வருவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.