தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்புரவாளரைத் தாக்கிய ஆய்வாளர்; மனமுடைந்து தற்கொலை முயற்சி!

திருவள்ளூர்: நகராட்சி சுகாதார ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற துப்புரவு பணியாளர், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்புரவாளரைத் தாக்கிய ஆய்வாளர்; மனமுடைந்து தற்கொலை முயற்சி

By

Published : Jul 4, 2019, 8:21 AM IST

திருவள்ளூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக இருப்பவர் ரவி. இவருக்கு நிலுவைத் தொகை இரண்டரை லட்சம் ரூபாய் வர வேண்டியது குறித்து சுகாதார ஆய்வாளரிடம் அடிக்கடி கேட்பதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்த பெண் ஒருவர் அலுவல் சம்பந்தமாக ஏதோ கேட்க, சுகாதார ஆய்வாளரைக் காண்பித்து அவரிடம் விசாரித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகாதார ஆய்வாளர், துப்புரவுப் பணியாளரின் சமூகத்தைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசியதுடன், என்னிடம் விசாரிக்கச் சொல்ல நீ யார் எனக் கேட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. நகராட்சி அலுவலகத்தில் பொது மக்கள் அதிகமாக இருந்த நேரத்தில் இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளால் பேசியும், தாக்கவும் செய்ததால், ரவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ரவி தனது மனைவி வத்சலாவிடம், தாக்குதல் பற்றி தெரிவித்து, இனி மேல் உயிர்வாழ விரும்பவில்லை எனக் கூறி தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக, திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரவிக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரி தரக்குறைவாகப் பேசியதுடன், தாக்கியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக, திருவள்ளூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும், நிலுவைத் தொகையைக் கேட்டு தொந்தரவு செய்வதாக என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தாக்கிய சுகாதார ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details