கரோனா தொற்றுப் பரவல் அதிகமானதால் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. தமிழ்நாட்டில், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், ஆந்திர - தமிழ்நாடு எல்லையோரப் பகுதிகளில் மது விற்பனை படு ஜோராக நடக்கிறது.
ஆந்திர எல்லையோரப் பகுதிகளான நகரி, கனகம்மாசத்திரம் ஆகியப் பகுதிகளில் மது பாட்டில்களை அதிக அளவில் வாங்கி வந்து திருத்தணி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.
இதனைக் காவல் துறையினர் கண்டுகொள்ளாததால், தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கின்போது அத்தியாவசியத் தேவைகளின்றி ஊர் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசின் விதி முறைகளை மீறி மதுபானங்களை மூட்டை மூட்டையாக இருசக்கர வாகனங்களில் கடத்திச் செல்பவர்களை காவல் துறையினரும் கண்டுகொள்ளாததாலும் ஆந்திர மதுபானங்களை தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வதாலும் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். இந்த மதுக் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!