திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் சாமு. நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் 142 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் ரூ.16 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளது.
அதேபோல பெரம்பலூர், விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.60 லட்சம் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நாளை அல்லது நாளை மறுநாள் ஆக்ஸிஜன் கிடைக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் ஆயிரத்திலிருந்து 1,300 வரை கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இதுவரை இரண்டாயிரத்து 500 பேர் மருத்துவமனைகளிலும், ஆயிரத்து 140 தனிமைப்படுத்தும் மையங்களிலும், இரண்டாயிரத்து 164 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 17 நடமாடும் கரோனா பரிசோதனை மையங்களும், 33 நடமாடும் தடுப்பூசி மையங்களும் செயல்படுகின்றன.
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 250 கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் உள்ளது. ஆவடி அரசு மருத்துவமனையில் இன்னும் 10 நாள்களில் 50 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு தொடங்கப்பட உள்ளது.
பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு தொடங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 385 கோடியில் புதியதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அவைகளும் கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும். திருவள்ளூரில் சித்த மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்ற செய்தி தவறானது. ஆக்ஸிஜன் 64.48 கிலோ லிட்டர் கையிருப்பில் உள்ளது. கடந்த செப்டம்பரில் 4.8 கிலோ லிட்டர் இருந்தது, தற்போதைய ஆட்சியில் அது 64.48 கிலோ லிட்டர் தயாராக உள்ளது. அதேபோல ரெம்டெசிவிர் மருந்து 936 குப்பிகள் கையிருப்பு உள்ளன" என்றார்.
திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் 250 நோயாளிகளுக்கான படுக்கைகளில் 212 பயன்பாட்டில் உள்ளதாகவும், 38 காலி படுக்கைகளை உள்ளதாகவும் தேவைப்படுவோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார். அப்போது பால்வளத்துறை அமைச்சர் சாமு.நாசர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மருத்துவமனை முதல்வர் அரசி உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து