திருவள்ளூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் வெள்ளி விழா பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாடுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
தொழில்வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய சாதகபாதக நிகழ்வுகளை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துக் கடை நடத்திவந்தவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கியும், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுத்தொகை, நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக தேர்தல் பரப்புரைக்காகச் சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு கிடைக்கிறது.
மு.க. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோரை பல இடங்களில் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். மு.க. ஸ்டாலின் தனது பரப்புரையின்போது விரசமாகப் பேசியது பொதுமக்களை வெறுப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
திமுகவினர் தனது பரப்புரை ஸ்டைலை மாற்றிக்கொள்ளாவிட்டால் பொதுமக்களின் நேரடி கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். திமுகவின் வாரிசு அரசியல் உச்சகட்ட வீழ்ச்சியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் திமுகவின் விரச பரப்புரை எடுபடாது. கடந்த ஒரு மாதத்தில் அதிமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாத பரப்புரை மட்டுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.