திருவள்ளூர்: திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கடந்த மாதம் திறந்து வைத்தார்.
இதையடுத்து மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பைக் குறைக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என்றார்.
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி கட்டுப்பாடுகளை அரசு அதிகரிக்குமா?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகளை அரசு அதிகரிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொற்றுப் பாதிப்பு மேலும் அதிகமாவது, குறைவது பொதுமக்களின் நடவடிக்கையில் தான் உள்ளது. அதை வைத்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
கூட்டமாக செல்லக் கூடாது
தொடர்ந்து பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் கூட்டமாக செல்வதைத் தவிர்த்து, அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கவுன்சிலிங் மூலம் ஒரு சில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ், கல்லூரி முதல்வர், அரசு சுகாதார துணை இயக்குநர் இளங்கோவன், சுகாதார இணை இயக்குநர் ஜவகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பள்ளி நுழைவு வாயிலில் ஊராட்சி மன்ற அலுவலகம்: பள்ளிக்கே ஒப்படைக்க கோரி போராட்டம்