ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாக பிச்சாட்டூர் அணை நிரம்பி தற்போது அணையிலிருந்து விநாடிக்கு ஐந்து ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீரானது தமிழ்நாடு எல்லையான சுருட்டுப்பள்ளியில் உள்ள ஆரணி ஆற்றில் கலந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பனப்பாக்கம், ஆரணி வழியாக பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டை சென்றடையும்.
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஐந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஊத்துக்கோட்டை பகுதியில் தற்போது அமைக்கப்பட்டு போக்குவரத்திற்குப் பயன்படுத்திவந்த தரைப்பாளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டைப் பகுதியில் இருந்து திருவள்ளூர் செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் வெள்ளத்தைப் பார்த்துச் செல்கின்றனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணத்தால் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ துணி துவைக்கவும் வேடிக்கை பார்க்க வேண்டாம் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.