திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் தீனதயாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கரோனா தொற்று தொடர்பான சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று (ஆகஸ்ட் 21) திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது; மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலம் இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் தீனதயாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா தொற்று சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு சித்த மருத்துவ அறிவியல் அடிப்படை கோட்பாடுகளின்படி உள்மருந்து, வெளிமருந்து சித்த யோகம் திருமூலர் ஆகியவை உள்ளடக்கிய சித்த மருத்துவ சிகிச்சை முறையில் கரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு குணமாகும் விதத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மூலிகை, தேநீர் மூலிகை ஆரோக்கிய பானம் ஆகியவற்றோடு பைரவ மாத்திரை, நிலவேம்பு குடிநீர் சூரண மாத்திரை, திப்பிலி போன்ற சித்த மருந்துகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் என் ஈஸ்வரி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் பிரீத்தி, சித்த மருத்துவர் பாண்டியராஜன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.