திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிகச் சந்தை மே 11ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் அலுவலர்கள் தற்காலிகச் சந்தை பகுதிகளில் கடைகள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், தற்காலிகச் சந்தையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இவ்வாறு மழைநீர் தேங்குவதால் கடைகளில் காய்கறிகளை வைக்க முடியாமல், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் காய்கறிகளை வாங்க வருவோர்களும், கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். காய்கறிகளும் விற்பனைக்கு முன்பே அழுகும் நிலை ஏற்பட்டதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். அதனால் நேற்று (ஜூன் 24) மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக தொடங்கப்பட்ட திருமழிசை சந்தையை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு சந்தைக்கு ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றி, நிலத்தை சமன்படுத்தி, அனைத்துப் பகுதிகளிலும் சீர் செய்யும் பணிகளை ஆய்வின் வாயிலாக உறுதி செய்தார். சம்பந்தப்பட்ட அலுவலர்களை ஓரிரு நாட்களில் போர்க் கால அடிப்படையில், அனைத்துப் பணிகளையும் முடிப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார் .
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) க. லோகநாயகி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (திருமழிசை) கோவிந்தராஜ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி, அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.