திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவர்கள், அங்கன்வாடி மைய அலுவலர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கு கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்காக முதல்கட்டமாக 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளன.
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம், பூந்தமல்லி சுகாதார நிலையம், கச்சூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 3 இடங்களில் இந்தத் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா இன்று ஆய்வு செய்தார்.
தற்போது எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போட உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்தகட்டமாக எவ்வளவு ஊசி தேவை என்பது குறித்து சுகாதார துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பொன்னையா, "திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 16ஆம் தேதி முதல் கோவிட் 19- தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல்கட்டமாக அரசு மருத்துவர்கள், அங்கன்வாடி மைய அலுவலர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கு 2 ஆயிரத்து 834 மையங்களில் போடப்பட உள்ளது.
இதுவரை 26 ஆயிரத்து 330 நபர்கள் கண்டறியப்பட்டு அதில் 20 ஆயிரத்து 440 பேருக்கு தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்துள்ளன. மீதமுள்ள தடுப்பூசிகள் பின்னர் வந்த பிறகு மற்றவர்களுக்கு போடப்படும்" என்றார்.