திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பெரும்பேடு, பெரிய கரும்பூர், வேப்பத்தூர், தேவம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக விளைந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் முழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர்.
தொடர் மழையால் 700 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்: விவசாயிகள் வேதனை!
தொடர் மழையின் காரணமாக திருவள்ளூர் அருகே 700 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.
கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிய நிலையில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நிவர் புயலின் போது சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை காப்பீட்டுத் தொகை கிடைக்காத நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சேதத்திலிருந்து தங்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.24 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!