கரோனா பரவிவரும் இந்த காலகட்டத்துக்கு மத்தியில் நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை பொது மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபட்டு வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலும் வடமாநிலத்தில் அதிகளவில் தசரா எனும் இந்த நவராத்திரி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வீடுகளில் கொலு வைக்கும் பழக்கம் பெரும்பான்மையான மக்களிடம் இருந்து வருகிறது. தென்மாவட்டமான நெல்லையை பொறுத்தவரை சிலர் மட்டுமே கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் கடந்த 12 ஆண்டுகளாக மிகுந்த ஆர்வத்துடன் வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் பயன்படுத்திவிட்டு குப்பையில் தூக்கி வீசப்படும் உடைந்த வளையல்கள், ஐஸ்கிரீம் டப்பாக்கள், ஆல்-அவுட் டப்பாக்கள், சிறுவர்கள் திண்பண்டமான ஜெல்லிக் கவர்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து விதவிதமான அலங்காரப் பொருள்களை தயாரித்து தனது வீடுகளில் அலங்கரித்து உள்ளார்.
யார்? இந்த இளைஞர் என்பதை பார்க்கலாம். திருநெல்வேலி நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்த வடிவேல் மீனா தம்பதியின் மகன் தான் கௌதம்(25). இவருக்கு சிறு வயதிலிருந்தே பக்கத்து வீடுகளில் கொலுவைத்து வழிபடுவதைப் பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து 12 ஆண்டுகளாக கௌதம் தனது வீட்டில் மிகுந்த ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரியை கொண்டாடுகிறார்.
இதில் விசேஷம் என்னவென்றால் வழக்கமான கொலு பொம்மைகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விதமான பொம்மைகளை வைத்து வரும் கௌதம் இந்த ஆண்டு புது முயற்சியாக ஒன்றுக்கும் உபயோகப்படாது என்று நம்மால் தூக்கி வீசப்படும் பொருள்களை ஆச்சரியப்படும் வகையில் கலைநயத்துடன் மாற்றி அதை கொலு பொம்மைகளுக்கு இடையே வைத்து வீட்டை அலங்கரித்து உள்ளார். அதன்படி உடைந்த வளையல்களை மெழுகுவர்த்தி மூலம் வளைத்து வீட்டின் வாசலில் தொங்கவிடும் அலங்கார பொருளாக மாற்றியுள்ளார்.
அதேபோல் பால், ஐஸ் கிரீம் டப்பாக்களை சேகரித்து அதன்மீது வண்ணங்கள் தீட்டி அலங்கரித்து அதையும் வாசலில் தொங்க விடும் அலங்கார பொருளாக மாற்றியுள்ளார். கொசு அழிப்பு இயந்திரமான ஆல்அவுட் டப்பாக்களைக் கொண்டு விதவிதமான அலங்கார பொருள்களை தயாரித்துள்ளார். மேலும் காதில் அழுக்கு எடுக்க பயன்படும் இயர் பட்ஸ் குச்சிகள், பெண்கள் கழுத்தில் அணியும் பாசிகள், கோயில்களில் பிரசாதம் வழங்க பயன்படும் தெர்மாகோல் பிளேட்டுகள், டீ கப் என பல்வேறு பொருள்களை கொண்டு விதவிதமான அலங்காரப் பொருள்கள் தயாரித்து கௌதம் அசத்தியுள்ளார்.
அதேபோல் தெர்மாகோலை கொண்டு 11 அடி கொண்ட பெருமாள் சிலையை தத்ரூபமாக செய்து தனது வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வருகிறார். அதாவது பெருமாளின் தலைப்பகுதியை மட்டும் கடையில் வாங்கி கை, கால் உடல் பகுதிகளை தெர்மாகோல் மூலம் செய்து அதன்மேல் சிறிதளவும் கூட குறை கண்டுபிடிக்க முடியாத வகையில் பட்டுத் துணிகளை கொண்டும் கோல்டன் பேப்பர்களை கொண்டும் அலங்கரித்து உண்மையான சிலை போன்ற பெருமாளை வடிவமைத்துள்ளார்.