விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, நெல்லையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தநிலையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ப. சிதம்பரத்தின் கைது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் பழிவாங்குதல். பத்து ஆண்டுக்கு முன்பு அமித் ஷாவை கைது செய்ததற்காக தற்பொழுது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ப. சிதம்பரம் ஓடி ஒளிந்துவிட்டார்; தலைமறைவாகிவிட்டார் என திட்டமிட்டு மத்திய அரசு வதந்தி பரப்பியது.
ஆனால் ஏற்கனவே சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் முன்பிணை பெறுவதற்கு அவசர வழக்காக எடுக்கக்கோரி சட்டப்பூர்வமாக அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது வழக்கை விசாரிப்பதாக சொன்ன நீதிபதி மாலை நான்கு மணிக்கு மேல் காணாமல்போய்விட்டார். இதிலிருந்து உச்ச நீதிமன்றத்தையும் உள் துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பதை உணர முடிகிறது. முன்பிணை வழங்கி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் ப. சிதம்பரம் தானே முன்வந்து ஒத்துழைப்பு நல்கியிருப்பார்.
அவர் வீட்டை முற்றுகையிட்டிருந்தாலே போதுமானது. அவர் வீட்டில் சுவர் ஏறி குதித்து அநாகரிகமான முறையில் கைது செய்தது ஏன்? இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இருக்கிறதா என்பதற்கு ஆதாரங்களும் இல்லை. ஆகவே இது அரசியல் சூழ்ச்சி.