நெல்லையில் பாஜக பிரமுகர் கொலை திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக கொலை மற்றும் கொலை வெரி தாக்குதல் என கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக 15க்கும் மேற்பட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை நகரம் கொலை நகரமாக மாறி வருவது குறித்து மக்கள் அச்சப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை இரவு பாஜக முக்கிய பிரமுகர் ஜெகன் நெல்லை மாநகரில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் பாஜகவின் நெல்லை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும், வழக்கறிஞராகவும் இருந்து வந்தார். புதன்கிழமை இரவு தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது, ஆறு பேர் கொண்ட கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கும் ஜெகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த ஜெகனுக்கும், அந்த திமுக பிரமுகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அடுத்தடுத்து மூளிக்குளம் பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் இருவரும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே போலீசார் ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலையில் திமுக பிரமுகர் ஈடுபட்டுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் காவல்துறை வெளியிடாத நிலையில், பாஜக பிமுகர் ஜெகன் கொலைக்கு திமுக பிரமுகர் தான் காரணம் என்று, கொலை செய்யப்பட்ட ஜெகனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஜெகன் உடலை வாங்க மறுத்து நெல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறியல் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் கூறியதை மறுத்த பெண்கள் உள்ளிட்ட பலரை மாநகர காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதில் சில காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் உயிரிழந்த ஜெகன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ”ஜெகனின் கொலை விவகாரத்தில் நீதி கேட்டுப் போராடிய பெண்களை நெல்லை மாநகர காவல் துறை குண்டுகட்டாக கைது செய்திருப்பது காவல்துறையின் மட்டமான செயல் என வன்மையாக கண்டிக்கக்தக்கது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்டோமே".. ஏடிஎம்மி கொள்ளை அடிக்க முயன்ற நபர் சிக்கியது எப்படி?