திருநெல்வேலி:நெல்லை, திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல ஆணை உத்தரவு இருந்தும் திசையன்விளையில் இருந்து நெல்லைக்கு எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் சென்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் இராணுவ வீரரான தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த கணேஷ் ராஜா (வயது 65) என்பவர், பரப்பாடி பஸ் நிலையத்தில் நெல்லைக்கு செல்வதற்காக நின்றபோது இந்த பஸ் வந்துள்ளது.
எனவே பேருந்தில் ஏறுவதற்காக அவர் பேருந்தை கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். பேருந்தை நிறுத்த கைகாட்டியதை பார்த்தும் டிரைவர் பஸ்சை நிற்காமல் நெல்லையை நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இராணுவ வீரரான கணேஷ் ராஜா தனது பைக்கில் அந்த பேருந்தை பின் தொடர்ந்து நான்குநேரி அருகே உள்ள ரயில்வே கேட் அருகே பஸ்சை மறித்துள்ளார். பின்னர் டிரைவரிடம் பரப்பாடியில் பேருந்தை நிறுத்தத்தாமல் சென்றதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் டிரைவருக்கு சாதகமாக களம் இறங்கி கணேச ராஜாவை தாக்க முற்பட்டனர். அப்பொழுது அங்கு இருந்த பொதுமக்கள் துணையுடன் அந்த பஸ்சை வழி மறித்து நிறுத்தியதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், இச்சம்பவம் குறித்து நான்குநேரி டி.எஸ்.பி ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பியிடம் கணேஷ் ராஜா தான் முன்னாள் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் தற்போது ஓய்வு பெற்ற நிலையில் இருக்கும் எனக்கே இந்த நிலையா? எனக் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் டிரைவரிடம் பேருந்தை எடுத்து செல் என்று கூறியதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் சரவணன் கணேஷ் ராஜாவிடம் ‘நானும் ரவுடிதான், சட்டையை கழற்றினால்’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.