தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திருநெல்வேலி - திருச்செந்தூர் புதிய மின்மய ரயில் பாதையில் 2 வாரத்தில் ரயில் இயக்கம்’

திருநெல்வேலி - திருச்செந்தூர் புதிய மின்மய ரயில் பாதையில் 2 வாரத்தில் மின்சார இன்ஜினை கொண்டு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் மின்சார எஞ்ஜின் ரயில்: மக்களுக்கு ரயில்வே எச்சரிக்கை!
திருநெல்வேலி - திருச்செந்தூர் மின்சார எஞ்ஜின் ரயில்: மக்களுக்கு ரயில்வே எச்சரிக்கை!

By

Published : Dec 19, 2022, 10:55 PM IST

திருநெல்வேலி - திருச்செந்தூர் புதிய மின்மய ரயில் பாதையில் ஆய்வு 2 வாரத்தில் ரயில் இயக்கப்படும்

திருநெல்வேலி: திருநெல்வேலி - திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த புதிய மின்மய ரயில் பாதையை இன்று தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் சிறப்பு ரயில் மூலம் காலை திருநெல்வேலியிலிருந்து சென்று, முதலில் பாளையங்கோட்டையில் குறிச்சி உபமின் நிலையத்தை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆற்றுப்பாலம், நாசரேத்தில் உள்ள உப மின் நிலையம், ஆறுமுகநேரி அருகே உள்ள ரயில்வே கேட் மற்றும் வழியில் குறுக்கிடும் தமிழ்நாடு மின்சார வாரிய மின் தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்து திருச்செந்தூருக்கு இன்று மதியம் 01.35 மணிக்கு ஆய்வு ரயில் சென்று சேரும்படி திட்டம் வகுக்கப்பட்டது. திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை ஆய்வு ரயிலை மின்சார இன்ஜின் மூலம் இயக்க ரயில் மின் பாதையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பேராபத்தை விளைவிக்கும் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் ரயில் மின் தடத்தை நெருங்கவோ, தொடவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். இது சம்பந்தமான எச்சரிக்கை விளம்பரப் பலகைகள் ரயில் நிலையங்களில் பயணிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளது. ‌

மின்சார இன்ஜின் பொருத்திய ஆய்வு ரயில் திருச்செந்தூரிலிருந்து இன்று மாலை 03.20 மணிக்கு புறப்பட்டது. அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும் எனத் தெரிகிறது. தலைமை முதன்மை மின் பொறியாளர் ஆய்வறிக்கைக்கு பிறகு, இந்த பகுதியில் ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.

இதுகுறித்து கூறிய தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா , ’திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு மின்மயமாக்கப்பட்ட ரயிலை இயக்குவது தொடர்பாக இன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம், இதற்காக 14 இடங்களில் உப மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் அதன் செயல்பாடு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம், இன்னும் 2 வாரத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு மின்மயமாக்கப்பட்ட இன்ஜினை கொண்டு ரயில்கள் இயக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: PFI தடை விவகாரம் - உபா சட்டத்திற்கான தீர்ப்பாய விசாரணை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details