திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ள குப்பன்னாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு சென்றே ஆசிரியர் பயற்சி வகுப்பில் சேர்ந்தார்.
ஆசிரியர் - பயிற்சி நிறுவனத்தில் நன்கு படித்து வந்த சங்கீதா இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வில் தமிழ் கற்பித்தல் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
இது சங்கீதாவுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மறுமதிப்பீடு செய்வதற்காக தனது விடைத்தாளின் ஒளி நகலினை பார்த்தபோது அதில் சரியான விடைகளும் தவறாக மதிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தனது தமிழ் ஆசிரியருடன் கலந்தாலோசித்து மறுமதிப்பீடிற்கு விண்ணப்பித்தார். மறுமதிப்பீடு தேர்வு முடிவுகளை எதிர்பாத்துக் காத்திருந்த சங்கீதாவுக்கு மறுமதிப்பீடு முடிவுகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் சங்கீதா மிகவும் மனமுடைந்து போனர்.
இது பற்றி சங்கீதா மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஆசிரியர் தேர்வில் தோல்வியடைந்தற்கு அரசு தேர்வுத் துறையும் மதிப்பீடு செய்த ஆசிரியர்களும்தான் காரணம். இது குறித்து ஆசிரியர் தரப்பிலும் போதிய விளக்கங்கள் தர யாரும் முன்வரவில்லை. இந்த குளறுபடி தொடர்பாக நீதிமன்றம் செல்ல என்னிடம் பணவசதி இல்லை.
என்னால் என் குடும்பம் மிகுந்த மன வேதனையில் உள்ளது. நான் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. என்று உருக்கமாக கூறியுள்ளார்.
கல்வித் துறையில் நடைபெறும் இதுபோன்ற தவறுகளால் கிராமபுற மாணவ மாணவிகள் வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இந்த குளறுபடி குறித்து தமிழ்நாடு அரசு, அரசு தேர்வு துறை, மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.